Tuesday 3 September 2013

தலை குப்புற வீழ்வது ரூபாய் மட்டுமல்ல.. மக்களின் வாழ்க்கையும்தான்

சிதம்பரத்தை ருபாய் தோற்கடித்துவிட்டது என்று ஆகஸ்ட் 29, 2013 அன்று ஒரு செய்தித்தாள் எழுதியது. சிதம்பரம் வருகிற செப்டம்பர் 16, 2013 அன்று 68 வயதைத் தொடுகிறாராம். ஆனால் ருபாய் மதிப்பு வீழ்ந்து வீழ்ந்து ஆகஸ்ட் 28 அன்றே 68.75 ஐத் தொட்டுவிட்டது. இப்படி ருபாய் மதிப்பு வீழ்வது என்றால் என்ன? அதற்கும் சாதாரண விவசாயிகளுக்கும்,தொழிலாளிகளுக்கும் என்ன சம்பந்தம்?

இது ஒன்றும் புரியாத புதிர் அல்ல! நமது வாழ்க்கை அனுபவமும், வாங்குகிற அடியுமே நமக்கு தெள்ளத் தெளிவாக விளங்க வைக்கும்.குப்புற வீழ்வது ரூபாயானாலும் காயம் சாதாரண மக்களுக்குத்தான்.

காயமே சிறந்த ஆசான் 

ஆகஸ்ட் 31 அன்றே பெட்ரோல் விலை லிட்டருக்கு சென்னையில் 2.99 ஏறிவிட்டது. டீசல் விலை 61 பைசா கூடிவிட்டது. மாதா மாதம் டீசலுக்கு 50 பைசா கூட்டப்படுகிறது. பாரத் பெட்ரோலியம் சேர்மன் ஏ.கே.சிங் செப் 2 'இந்து' ஆங்கில நாளிதழில் தந்துள்ள நேர்காணலைப் பாருங்கள்.ருபாய் மதிப்பு 1 ருபாய் மதிப்பு சரிந்தால் டீசல் விலையை லிட்டருக்கு 90 பைசா ஏற்றவேண்டுமாம். என்ன அர்த்தம்? 50 பைசா உயர்வு போதாது என்கிறார். 

உர விலை ஏறியுள்ளது. விவசாயிக்கு ஏற்கனவே கைக்கும் எட்டுவதில்லை வாய்க்கும் எட்டுவதில்லை. நாடாளுமன்றத்தில் விவசாய அமைச்சரே நவம்பர் 30, 2012 ல் சொன்ன தகவலைப் பாருங்கள். "2010-12 க்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் நெல்லின் உற்பத்திச் செலவு குவிண்டாலுக்கு ரூ 146 கூடியது. ஆனால் விவசாயிக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையோ ரூ 80 மட்டுமே அதிகரித்தது. 2011-13 க்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் கோதுமை உற்பத்திச் செலவு குவிண்டாலுக்கு ரூ 171 கூடியுள்ளது. ஆனால் விவசாயிக்கான குறித்த பட்ச ஆதரவு விலையோ ரூ 65 தான் கூடியிருக்கிறது." இப்போது உர விலை இன்னும் இன்னும் கூடினால் என்ன ஆவது! கட்டியிருக்கிற கோவணத்திற்கும் ஆபத்து அல்லவா!

இதுதவிர பாமாயில், குளியல் சோப்பு, சலவை சோப்பு, மருந்துகள், இரும்பு என எல்லா விலைகளும் கூடியுள்ளன. ஏதோ வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆகிற பொருட்களின் விலைகள்தான் என்பதல்ல .பெட்ரோல் விலை கூடினால் போக்குவரத்து செலவினம் கூடும். வண்டியில் சவாரி செய்கிற எல்லா சரக்குகளின் விலைகளும் கூடும். 

எனவே ருபாய் மதிப்பு வீழ்கிற பொருளாதாரம் புரிகிறதோ இல்லையோ இவ் வீழ்ச்சி தங்களது வாழ்க்கைத் தரத்தின் வீழ்ச்சி என்பதை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

வீழ்ச்சி எப்படி !

இப்போது ஒரு டாலருக்கு ரூ 68.75 ஆக உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பிரணாப் முகர்ஜி இடம் இருந்து நிதியமைச்சர் பொறுப்பு ஏற்கும் போது ரூ 55 ஆக இருந்தது. 
சில பேர் ருபாய் மதிப்பு கூடுவது போல இருக்கிறதே என்று குழம்புகிறார்கள். ஒரு சின்ன உதாரணம் பாருங்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டாலர் பெறுமான உரத்தை நாம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறோம் என்றால்  55 ருபாய் கொடுத்து வந்தோம். ஆனால் இன்று 1 டாலர் உரத்தை இறக்குமதி செய்ய வேண்டும் என்றால் ரூ 68.75 தர வேண்டியுள்ளது. வேறு மாதிரி சொல்வதென்றால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ரூபாய் தந்து இறக்குமதி செய்த சரக்குகளை எல்லாம் ஒன்னே கால் ருபாய் கொடுத்து இப்போது வாங்க வேண்டியுள்ளது. காசுக்கு மரியாதை குறைந்துள்ளது இல்லையா! இதைத்தான் டாலருக்கு எதிராக ருபாய் மதிப்பு வீழ்ச்சி என்கிறோம். 

ஏன் டாலருக்கு எதிராக ருபாய் மதிப்பை பார்க்க வேண்டியிருக்கிறது என்றால் டாலர்தான் உலகக் கரன்சியாக இன்றைக்கு உள்ளது. உங்கள் ரூபாயைக் கொடுத்து உலகச் சந்தையில் சரக்கு வாங்க முடியாது. இந்தியாவிற்கு தேவையான பெட்ரோல்,டீசலில் 80 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறோம்.
தங்கம் போன்ற ஆடம்பர பொருட்களும் நிறைய இறக்குமதி ஆகின்றன. இதற்கெல்லாம் டாலர் தேவைப்படுகிறது. ஒரு பொருளுக்கு கிராக்கி கூடும்போது அதன் விலை கூடும் அல்லவா.
அதனால் டாலர் விலை கூடுகிறது. ருபாய் விலை வீழ்கிறது. நாணயப் பரிவர்த்தனைகளும் சரக்குகள் ஆகிவிட்டன. 

தனிக்காட்டு ராஜா 

இப்படி அமெரிக்காவின் டாலர் தனிக்காட்டு ராஜா மாதிரி இருப்பதற்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் ஒரு டாலருக்கு 68 ரூபாய்க்கு பதிலாக, ஒரு டாலருக்கு ஒரு ருபாய் என்று இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்! சுகமான கற்பனை மட்டுமல்ல் இது. 1947 க்கு முன்பு ஒரு டாலருக்கு ஒரு ருபாய் என்ற நிலைமை இருந்திருக்கிறது. ஏன் 1910 ல் ஒரு டாலருக்கு 10 பைசா என்று கூட இருந்திருக்கிறது. ஆனால் உலக பொருளாதாரத்தில் இரண்டாவது உலகப் போருக்கு பின்னர் அமெரிக்காவிற்கு கிடைத்த செல்வாக்கு, சோஷலிச முகாமிற்கு 80 களின் இறுதியில் ஏற்பட்ட பின்னடைவு, மாற்று நாணயமாக வளர்ந்த யுரோ சந்தித்துள்ள பின்னடைவு. டாலரின் மேலாதிக்கத்திற்கு சவால் விட்ட சதாம் உசைன் போன்றவர்களை ராணுவ ரீதியாக ஒடுக்கியது.. இப்படி நிறைய விசயங்களைப் பேசினால்தான் டாலரின் மேலாதிக்கத்தை புரிந்துகொள்ள முடியும். லத்தின் அமெரிக்க நாடுகள் போன்று மாற்றுப் பாதை நோக்கி இந்திய போன்ற நாடுகள் சிந்திக்க மறுப்பதும் டாலரின் பலமாகும். பெட்ரோலுக்கு ஒரே தடவையில் மூன்று ரூபாய் அதிகமாக அழுவதற்கும், உலக அரசியலுக்கும் இருக்கிற தொடர்பை 
விளக்குவதற்கு பக்கங்கள் போதாது.

சரி! எங்கேயோ போய் விட்டோம்! இப்போது அண்மைக் காலமாக டாலர் ஏறுமுகமாக இருப்பதற்கு என்ன காரணம்? அமெரிக்க பொருளாதாரம் சிறிது மீட்சி அடைந்திருப்பதால் இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளின் பங்குச் சந்தையை விட்டு டாலர் வெளியேறி அமெரிக்காவிற்கு திரும்புகிறது; அமெரிக்காவும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வட்டி விகிதங்களை அதிகரிக்கின்றது ஆகியன உடனடிக் காரணங்கள் என்பது உண்மையே. ஆனால் இப்படிப்பட்ட சர்வதேசக் காரணிகள் இவ்வளவு நம்மை பாதிப்பது ஏன்? இதற்கான உள்நாட்டுக் காரணங்களை உள்ளே போய் ஆய்வு செய்து உண்மையை பேச மன்மோகன் சிங்கும், சிதம்பரமும் தயாராக இல்லை. 
  
இறக்குமதியை திறந்துவிட்டது யார்!

நடப்புக் கணக்கு பற்றாக்குறை பற்றி கண்ணீர் வடிக்கிறார்கள் ஆட்சியாளர்கள். நடப்பு கணக்கு பற்றாக்குறை இப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதமாக உயர்ந்திருக்கிறது, அதைக் குறைக்கவேண்டும் என்கிறார்கள். தங்கம் வாங்குவதைக் குறையுங்கள் என்று சிதம்பரம் வேண்டுகோள் கொடுக்கிறார். 

ஆனால் இப்படி இறக்குமதி பெருகியதற்கு யார் காரணம்! 1991 ல் 3330 பொருட்கள் மீது இறக்குமதி அளவுக் கட்டுப்பாடுகள் (Quantitative Restrictions) இருந்தன. அவை படிப்படியாக கைவிடப்பட்டு 3300 பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன. கவர்ச்சி கரமான ஆடம்பரப் பொருட்கள் வருவதை வளர்ச்சி என்றும் பறை சாற்றினார்கள்.

இன்று இந்தியா முழுவதும் உள்ள அரைக் கோடிக்கும் அதிகமான கைநெசவாளர்கள் வாடுவது ஏன்! ஏன் அவர்கள் தொழிலை விட்டு ஓடுகிறார்கள்? ஆயத்த ஆடைகளுக்கு ஜீரோ இறக்குமதி வரிகள் என்று அறிவித்தது யார்! 

உலக வர்த்தக அமைப்பு அனுமதிக்கிற அளவுக்குகூட இறக்குமதி வரிச் சுவர்களை எழுப்பாமல் பல பொருட்களை உள்ளே அனுமதித்தது யார்! ரூ 58000 கோடிகள் வரை தங்க இறக்குமதிக்கு மட்டும் வரிச் சலுகைகளை கடந்த ஆண்டு வரை தந்து ஊக்குவித்தது யார்!

இப்படி இறக்குமதிகளை மானாவாரியாகத் திறந்துவிட்டு இப்போது டாலர் தேவை... டாலர் தேவை.. என்று அலைந்தால் என்ன செய்வது! 

கேன்சருக்கு அனால்ஜினா 

கேன்சர் நோயாளிகளுக்கு பக்க விளைவாக காய்ச்சல் வரலாம். ஆகையால் அனால்ஜின் குணப்படுத்திவிடுமா! ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை ஏற்றுவது, இறக்குவது எல்லாம் இப்படி காய்ச்சல் மாத்திரை கொடுப்பது மாதிரிதான்.தங்க இறக்குமதி வரியை சிதம்பரம் கூட்டினாலும் இறக்குமதி குறையவில்லையே ஏன்! மக்கள் பேங்குகளில் போடுகிற பணத்திற்கு பணவீக்கத்தால் மரியாதை போவதால் பயந்து போய் தங்க முதலீடுகளுக்கு ஓடுகிறார்கள். 

ருபாய் மதிப்பு குறைந்தால் இந்திய ஏற்றுமதியாளருக்கு லாபம் வரவேண்டும. அதாவது வருகிறதா! காரணம், உலகச் சந்தையில் கிராக்கி குறைந்திருப்பதால் விற்க முடியவில்லை. வளர்ந்த நாடுகள் பேரம் பேசி விலையைக் குறைத்து விடுகின்றன. ஏற்றுமதியாளர்கள் முன்பேர வர்த்தகத்தில் பதிந்ததால் இப்போதைய விலை கிடைப்பதில்லை. முன்னால் போனாலும் உதை, பின்னால் போனாலும் உதை என்பது மாதிரி இறக்குமதி விலை கூடுகிறது. ஏற்றுமதிக்கோ விலை கிடைப்பதில்லை. 
  
உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்பு, மக்களின் வாங்கும் சக்தி ஆகியவற்றை அதிகரிக்காமல் என்ன ததிங்கனத்தோம் போட்டாலும் தீர்வு கிடைக்காது. உள்ளூரில் விலை போகாத மாடு வெளியூரில் விலை போகாது என்பது பழமொழி. உலகமயத்திற்கும் அது பொருந்தும். உள்நாட்டுச் சந்தையை பலப்படுத்தாமல் வெளிநாட்டுச் சந்தையின் பயன்களை அனுபவிக்க முடியாது. இது உலகமயம் தந்துள்ள அனுபவம்.

'என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்' என்பதை சிதம்பரம் புரிந்துகொள்ள வேண்டும். அப்படியொரு வளம் இங்கே இல்லையென்றால், தொழில்நுட்பம் இல்லையென்றால் வெளிநாட்டில் பெறலாம். ஆனால் இருக்கிற வளத்தை காவுகொடுத்துவிட்டு கையேந்தினால் நாம் பெற விரும்புகிற தொழில் நுட்பமும் கௌரவமான பரிமாற்றமாக இருக்காது. 

மன்மோகனும், சிதம்பரமும் இதை சிந்திப்பதாகத் தெரியவில்லை. இப்போதும் மேலும் அந்நிய முதலீட்டை சில்லறை வர்த்தகத்திலும், நிதித் துறையிலும் திறந்து விடுவதே தீர்வு என்று கூறுகிறார்கள். கண்ணை விற்றுவிட்டு சித்திரம் வாங்கிய பிறகும் கற்பனயில் ரசிப்பதே அழகு என்கிறார்கள்.  

க.சுவாமிநாதன் 


Thursday 29 August 2013

ஈழத்தில் முஸ்லிம்கள் தமிழர்கள் உறவு

என்.சி.பி.எச் வெளியீடு- 32 பக்கங்களில் ரூ 15 க்கு கிடைக்கிறது. இலங்கை மூத்த தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி வரலாற்று ரீதியாக இலங்கையில் முஸ்லிம்கள்-தமிழர்களுக்கு இடையிலான உறவு நிலை பற்றி எழுதியுள்ள கட்டுரை.

1885 ல் இலங்கைச் சட்ட மேலவையில் பொன்னம்பலம் ராமநாதன் ஆற்றிய உரை "தேசியத்தால் தமிழர்... சமயத்தால் முஸ்லிம்" என்று செய்த வரையறை சர்ச்சைக்கு ஆளானதில் துவங்கி எல்.டி.டி.இயின் துவக்க காலம் வரை ஏற்பட்ட பல்வேறு நிகழ்ச்சிப் போக்குகள்- அதன் தாக்கங்கள் நூலில் இடம் பெற்றுள்ளது. 

" மொழி விவகாரம்" மெல்ல மெல்ல இனப்பகைமையாக மாறிய போது நாட்டில் உள்ள இரண்டாவது , பெரிய சிறுபான்மைக் குழுவின் நிலைப் பாடானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது" 

என்று இஸ்லாமியார்க்குள்ள அரசியல் முக்கியத்துவத்தை சிவத்தம்பி குறிப்பிடுகிறார்.

மன்னார் மாவட்டத்தில் 27 சதவீதம் இஸ்லாமியர்கள். மட்டக் களப்பில் 24 சதவீதம், திருகோண மலையில் 29 சதவீதம். அம்பாறை மாவட்டத்திலோ 42 சதவீதம் என்ற தகவல்களும் இலங்கைப் பிரச்சினையில் இஸ்லாமியர்களின் கருத்துக்குள்ள தாக்கத்தை உணர்த்துகின்றன.



சிங்கள அரசியல் கட்சிகள்  தமிழருக்கு எதிரான கருவியாக முஸ்லிம்களை பயன்படுத்தின  என்பதைக்  குறிப்பிடுகிறார்.

தமிழ்ப் போராளிகள் இஸ்லாமியர் பகுதியில் கட்டாய  நிதி சேகரிப்பு செய்ததும், தராதவர்களின் குடும்ப உறுப்பினர்களை கடத்தி கொண்டு போய் விடுவோமென்பது  போன்ற மிரட்டல்கள் எவ்வாறு அவர்களை விலகிப் போய்ச் செய்தது என்பது பற்றிய பதிவுகள் நூலில் உள்ளன. 
தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி,  அரசுடன் மாகாணப் பிரிவினை பற்றி பேசியபோது கிழக்கு மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கிற அம்பாறை மாவட்டத்தை இணைக்காமல் கோரிக்கை வைத்தது தூரத்தை அதிகமாக்கியதாக சுட்டுகிறார்.

சிங்களம் என்பது சிங்கள- பௌத்தமாகவும், சைவ - தமிழ் கருத்து நிலையே தமிழர் ஒருமை நிலையாக பரிணமித்ததும் இயல்பாகவே தங்களின் மத அடையாளத்தை தக்க வைப்பதை நோக்கி இஸ்லாமியரைத் தள்ளியதையும் விவரிக்கிறார்.

இது எழுதப்பட்ட காலம் பற்றிய குறிப்பு இல்லை. எனினும் தகவல்களை வைத்து பார்க்கும்போது 1990 களில் எழுதப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஆகவே கருத்துக்களில் சார்பு நிலை பற்றிய பிரச்சினை அதிகம் தென்படவில்லை.

இன்னும் ஆழமான கருத்துக்கள்  இடம் பெற்றுள்ளன.

ஜீவாவின் பண்பாட்டு அரசியல்

என்.சி.பி.எச் கொண்டு வந்துள்ள சிறு நூல் இது. 23 பக்கம். ரூ 15 தான். தோழர் முத்து மோகன் எழுத்து என்றாலே கொஞ்சம் கனமாகத் தான் இருக்கும்.

பண்பாட்டு அரசியல் என்ற சொல்லாக்கம் குறித்த முன்னுரையோடு துவங்குகிறது. 

"மார்க்ஸ் அவரது காலத்தில் மொத்தச் சமுகத்தைப் பொருளாதார அடித்தளம் என்றும் அதன் மேலெழும் கலை, இலக்கியம், அரசியல், சமயம், தத்துவம் ஆகியவற்றை மேற்கட்டுமானம் என்றும் இரண்டாகப் பகுத்துக் காட்டினார் என்பதை நாம் அறிவோம். கிராம்சி இப்பகுப்பை மறுக்கவில்லை. இருப்பினும், மேற்கட்டுமானத்தை மேலும் இரண்டாகப் பகுத்துக் காட்டினார். உடைமைச் சமுகத்தின் மேற்கட்டுமானத்தில் ஆளும் வர்க்கத்தின் நேரடி அதிகார அரசியல், குடிமைச் சமுகத்தின் பண்பாட்டு அரசியல் ஆகிய  இரண்டு தளங்கள் தொழில்படுவதாக கிராம்சி அடையாளப்படுத்தினார். அரசு, அரசியல் கட்சிகள்,தேர்தல், சட்ட சபைகள், நீதிமன்றம்,காவல்துறை போன்றவற்றை நேரடி அரசியல் அமைப்புகள் என்றும் மதம், கல்வி நிறுவனம், குடும்பம்,  சமுக நிறுவனங்கள் ஆகியவற்றை குடிமைச் சமுக அமைப்புகள் என்றும் கிராம்சி வரையறுத்தார். நேரடி அரசியல் தன்மை இல்லாமல், குடிமைச் சமுக அமைப்புகள் உளவியல் ரீதியாக மக்களின் ஒப்புதலைப் பெற்று செல்வாக்குச் செலுத்துவது பண்பாட்டு அரசியல் என்று கிராம்சி கூறுவார். எனவே உழைக்கும் மக்களின் ஆட்சி அதிகாரத்தை சாதிக்க விழையும் கம்யுனிஸ்டுகள், குறிப்பிட்ட அந்தச் சமுகத்தின் போருள்ளதர அடித்தளம், நேரடி அரசியல், பண்பாட்டு அரசியல் மூன்று தளங்களிலுமே கவனம்  என்று கிராம்சி அறிவுறுத்தினார். இத்தகைய ஒருங்கிணைந்த அரசியல் செயல்பாடுகளின் மூலமாகவே தேசிய வெகுமக்கள் மனோபாவத்தை வென்றெடுக்க முடியும்  என்று கிராம்சி கருதினார்."

என்று புது வாசகர்களுக்கு பண்பாட்டு அரசியல் பற்றி எளிமையான விளக்கத்தைத் தருகிறார்.

இந்நூலில் விவாதத்திற்குரிய பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அடையாள அரசியலின் இயங்கியல் பற்றி பேசுகிறார்.

ஜீவா எவ்வாறு பண்பாட்டு  அரசியலை  தனித்து தொழில்படாமல் முன்வைத்தார்... திராவிட இயக்கத்தார் பழமையை மையமிட்டே அமைக்கையில் ஜீவா எவ்வாறு பழமை/புதுமை என்ற எதிர்வுகளின் ஊடே இலக்கியங்களையும், வரலாற்றையும் மதிப்பிட்டார்... அவரின் முரண் தர்க்க வாசிப்பு முறை ... மக்கள் வகைப்பட்ட பண்பாடு (எ) ஆளும் வர்க்க பண்பாடு...பழமையை உயிர்ப்பிக்க முயல்தல் REVIVALISM  (எ ) மரபு மறுப்பு போக்கு (NIHILISM ) ஆகிய இரண்டுமே பிற்போக்கின் வெளிப்பாடுகளே.. என 
சிறுநூலில் பல பரந்துபட்ட விவாதங்களை தோழர் முத்துமோகன் செய்கிறார்.
இங்கு உதாரணங்களை விவரிக்க இடமில்லை. நூலைப் படித்தால் இன்னும் தேட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது.


Monday 19 August 2013

வழுக்கு மரம்


விவசாயியின் வாழ்க்கையை வேறு எப்படி வர்ணிப்பது?

செங்கோட்டையில் ஆகஸ்ட் 15 அன்று கொடியேற்றிய பிரதமர் மன்மோகன் சிங் "கடந்த ஒன்பது  ஆண்டுகளில்தான் அதிக தடவை விவசாயிகளின் விளைபொருட்களுக்கான ஆதரவு விலை ஏற்றப்பட்டுள்ளது" என்று பெருமைபட்டுக் கொண்டார். பீப்பில்ஸ் டெமாக்ரசி -ஆகஸ்ட் 12-18, இதழ் தலையங்கம் இது பற்றி ராஜ்ய சபாவில் விவசாய அமைச்சர் நவம்பர் 30,2012 அன்று அளித்த பதில் ஒன்றையே பதிலாக தந்துள்ளது.

விவசாய செலவினங்கள் மற்றும் விலைகள் ஆணையம் தருகிற தகவல்படி  2010-12 க்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் ஒரு குவிண்டால் (100 கிலோ) நெல் உற்பத்திச் செலவினம் ரூ 146 கூடியுள்ளபோது அரசின் குறைந்த பட்ச ஆதரவு விலையோ ரூ 80 மட்டுமே கூடியுள்ளது. கோதுமைக்கு செலவினம் 2011-13 க்கு இடைப்பட்ட காலத்தில் குவிண்டால்  ரூ 171 கூடியிருக்கும் போது ஆதரவு விலையோ ரூ 65 தான் அதிகரித்துள்ளது.

உணவு பாதுகாப்பு, வறுமை, அந்நிய முதலீடு பற்றிய பிரதமரின் கருத்துக்கள் பற்றியும் இத் தலையங்கம் ஆழமான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

வறுமை கணக்கீடே ஒரு வளமான தொழில்

இப்படி ஒரு கூர்மையான கமென்ட் பொருளாதார நிபுணர் வாயில் வருவது நம்மை அதிர்ச்சி அடையச் செய்கிறது. சபாஷ் உத்சா பட்நாயக்! என்று சொல்லத் தோன்றுகிறது.

அவரின் "பீப்பில்ஸ் டெமாக்ரசி" (ஆகஸ்ட் 5-11, 2013) - எகனாமிக் நோட்ஸ் கட்டுரைதான் இப்படித் துவங்குகிறது. வளர்முக நாடுகளில் வறுமைக் கணக்கீடுகளைச் செய்வதற்கும், பன்னாட்டு நிறுவனங்களில் இது குறித்து பணியாற்றுவதற்கும்  நூற்றுக்கணக்கான பொருளாதார நிபுணர்களுக்கு அரச சம்பளம் கிடைக்கிறது என்ற உண்மையை உடைக்கிறது.

வறட்சியும், வேலையின்மையும் நிறைந்த 2010-12 ல் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் நகரங்களில் 7 சதவீதமும் (20 லிருந்து 13 சதவீதம்) கிராமங்களில் 8 சதவீதமும் ( 33 லிருந்து 25 சதவீதம் ) குறைந்துள்ளது என்றால் நம்ப முடியுமா! திட்டக் கமிசன் வைக்கிற அளவுகோலான நகரத்திற்கு ஒரு நாளுக்கு ரூ 33 கிராமத்திற்கு ரூ 27 ஐ என்பது தவறான மதிப்பீடு என்று  தெரிந்தும்  பிடிவாதமாக தொடர்கிறது என்கிறார் உத்சா பட்நாய்க். இதே போன்ற அளவுகோலைத் தொடர்ந்தால் 2014-15 ல் நகர வறுமைக் கோடு ஜீரோவை தொட்டுவிட்டதாக அறிவிக்கப்படும் என்று எச்சரிக்கிறார். கிராமப் புற வறுமையும் 12% க்கு சரிந்துவிட்டதாக அரசு சொல்லுமென்றும் கணிக்கிறார். 

கிராமப்புற உணவு நுகர்வு 2200 கலோரி- நகர்ப்புறத்திற்கு 2100 கலோரி என்ற அறிவியல் பூர்வமான, பொதுவாக ஏற்றும் கொள்ளப்பட்டுள்ள அளவுகோலை கொண்டால் 75 சதவீத கிராமத்தவர்களுக்கும், 73 சதவீத நகரத்தவர்களுக்கும் அது கிடைக்கவில்லை என்பதே உண்மை. 2005 ல் இதே சதவீதங்கள் 70 மற்றும் 65 ஆக இருந்தன. வறுமை கூடியுள்ளதா? குறைந்துள்ளதா?

டெல்லியில் வறுமைக் கோட்டிற்கான மாதச் செலவினம்  2010 ல் ரூ 1040 என அரசால் சொல்லப்பட்டது. இதைக் கொண்டு 1400 கலோரி உணவையே நுகர முடியும். ரூ 5000 மாதச்  செலவினம்  செய்தால்தான் ரூ 2100 கலோரி உணவை நுகர முடியும் என்பதே உண்மை.

இப்படி நிறைய தகவல்களைத் தருகிறது இக்கட்டுரை. அரச சம்பளத்தை துறந்து மக்களுக்காக சிந்திக்கிற பொருளாதார  நிபுணர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் உத்சா  பட்நாயக்.

பிரேசில் - போராட்டங்கள் ஏன் ?

"ஜூன்" மாதம் துவக்கத்தில் இருந்து ஒர்க்கர்ஸ் பார்ட்டி ஆட்சி செய்கின்ற பிரேசிலில் நடைபெற்று தற்போது முடிந்துள்ள போராட்டங்கள் உலகம் முழுவதும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆர். அருண்குமார், "பீப்பில்ஸ் டெமாக்ரசி" ஆகஸ்ட் 5-11 இதழில் எழுதியுள்ள கட்டுரை நம் மனதில் எழும் கேள்விகளுக்கு விடை தருகிறது.

2003 ல் பதவிக்கு வந்த லூலா அரசாங்கம் அமலாக்கிய எங்கள் வீடு.. எங்கள் இல்லம் என்கிற ஏழைகளுக்கான திட்டம் நிறைய பேருக்கு குடியிருப்பை தந்துள்ளது. ஆனால் அப்பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. பொது போக்குவரத்து இல்லை. பொதுச் சேவைகள் கிடைப்பதில் குறைபாடுகள் உள்ளன. மக்களிடம் உள்ள பெரும் எதிர்பார்ப்புகளுக்கு அரசு ஈடு கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால் லூலா எடுத்த பொருளாதார நடவடிக்கைகள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கையை 37.5% லிருந்து 20.9% க்கும், அதீத வறுமைக் கோட்டை 13.2% லிருந்து 6% க்கும் குறைத்துள்ளன. நடுத்தர வர்க்கம் 38% லிருந்து 53 % ஆக உயர்ந்துள்ளது.

லூலா அரசுக்கு மேலவையில் (SENATE) பெரும்பான்மை இல்லை. கீழவையில் (CONGRESS) மிகச்சிறு பெரும்பான்மையே உள்ளது. பல கவர்னர்கள், பிராந்திய அரசாங்கங்கள்,மேயர்கள்  எதிர்க் கட்சிகளிடம் உள்ளதால் லூலா அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தடுக்கப்படுகின்றன. 

ஆனால் இதற்கான கோபத்தையெல்லாம் லூலா அரசின் மீது திருப்பிவிட ஊடகங்கள் பெரும் முயற்சி செய்கின்றன. அரசின் பதில்கள் மக்களுக்கு போய்ச் சேருவதில்லை. 

விளையாட்டை நேசிக்கும் பிரேசிலில் 2014ல் நடைபெறவுள்ள உலக கால்பந்து போட்டி, 2016 ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் எல்லாம் "வீண் செலவுகள்" என்று எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் கூப்பாடு போடுகின்றன. இப்போட்டிகள்  36 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாகும்; கல்விக்கும்-உடல் நலத்திற்கும் செய்யப்பட்ட ஒதுக்கீடுகள் வெட்டப்படாது என்கிற   அரசின் விளக்கங்களை ஊடகங்கள் மறைக்கின்றன.  

ஆனால் ஆளுங்கட்சியும் ( PT- WORKERS PARTY ) போராட்டத்தின் பின்பலமாக 
உள்ள மக்களின் எதிர்பார்ப்புகளை அங்கீகரிப்பது வித்தியாசமும், பக்குவமுமான அணுகுமுறை ஆகும். ஆளுங்கட்சியின் தலைவி

"வீதிகளில் வெளிப்படுகிற வீரியம் மிக்க உணர்வுகள் இன்னும் பல மாற்றங்களையும், பயன்களையும் பிரேசில் மக்களுக்கு கொண்டுவந்து சேர்ப்பதற்கு பயன்படுத்தப்படவேண்டும் . இத்தகைய வெளிப்பாடுகள் நமது ஜனநாயகத்தின் வலிமையைக் காட்டுபவை; பிரேசிலை முன்னெடுத்துச் செல்வதற்கான இளைஞர்களின் வேட்கையை உணர்த்துபவை" 

என்று தொலைக்காட்சி உரையில் குறிப்பிட்டார்.

அரசில் அங்கம் வகிக்கிற கம்யுனிஸ்ட் கட்சியும் போராட்டங்களை ஆதரித்ததோடு கல்விக்கான ஒதுக்கீட்டை 10 % க்கு உயர்த்துமாறும், ஏற்றத் தாழ்வுகளை குறைக்க விரைந்து செயலாற்றுமாறும், கார்பரேட்டுகள் மீது கூடுதல் வரி விதிக்குமாறும் கோரியுள்ளது.

மக்களின் எதிர்பார்ப்புகளை வலதுசாரி சக்திகளும், வசதி படைத்தோர் கைகளில் உள்ள ஊடகங்களும் பயன்படுத்தி அரசியல் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

Sunday 18 August 2013

போரில் மேய்ந்த மாடு

"போரில் மேய்ந்த மாட்டிற்கு புடுங்கிப்போட்டால் கட்டுப்படியாகாது" - ரேகா ( மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் ) அமலாக்கம் பற்றிய ஜி.மணி அவர்களின் ( மாநில பொதுச் செயலாளர் , தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கம்) தீக்கதிர் ( 17.8.2013) கட்டுரையில் அதில் நடைபெறுகிற முறைகேடுகளை விளக்குவதற்காக கூறப்பட்டுள்ள பழமொழி.

விதி மீறல்களை பற்றி விவரிக்கிற கட்டுரை , கறாராக அமலாக்கப்படும் ஒரு விதி பற்றி எடுத்துரைத்துள்ளது.

- ஒரு நாளைக்கு 42 கன அடி மண்ணை வெட்டிக் கொட்ட வேண்டும். அதாவது இரண்டு டன் அளவு மண்ணை தோண்டி எடுத்துப் போடவேண்டும். ரேகா திட்டத்தில் வேலைக்கு வருபவர்களில் 85% பேர் பெண்கள். இந்தியப் பெண்களில் 55% பேர் இரத்த  சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தேசிய குடும்ப நல ஆய்வு தந்துள்ள தகவல்.இவர்கள் 8 மணி நேரம் வெயிலில் நின்று 2 டன் மண்ணை தோண்டுவது என்றால் முடியுமா ! குறைவாகத் தோண்டினால் கூலி ரூ 30, ரூ 40 எனக் குறைந்துவிடுகிறது. இதை வைத்து எதை வாங்குவது, எதை சாப்பிடுவது என்று திண்டாடுகிறார்கள்-

இந்தக் கட்டுரையின் இறுதி பகுதியில் இடம் பெற்றுள்ள கோரிக்கைகளில் ஒன்று வேலை அளவை 24 கன அடியாகக் குறைத்திடு! என்பதாகும்.



Saturday 17 August 2013

"எங்கள் குழந்தைகள் பட்டினியால் சாகவேண்டாம்"

தி இந்து - ஆகஸ்ட் 18 இதழ் -மும்பையில் " ஏன் இந்திய ஏற்றத்தாழ்வுகள் விவாதத்திற்குரியவை" என்கிற தலைப்பில் மும்பையில் பத்திரிகையாளர் சாய்நாத் அவர்கள் ஆற்றிய  டி .வி.சிதம்பரம் நினைவுரை.

* " இந்தியா "FORBES" (போர்ப்ஸ்) இதழ் வெளியிடும் பில்லியனர் எண்ணிக்கை பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. ஆனால் மனித வள மேம்பாட்டுக் குறியீட்டில் 136 வது இடத்தில் உள்ளது. போர் பாதிப்பிற்கு ஆளாகியுள்ள ஈராக், இலங்கையை விட இந்தியா மனித வள மேம்பாட்டில் கீழே உள்ளது.

* தானே அருகில் உள்ள ஓர் ஆதிவாசி பகுதிக்கு சாய்நாத் சென்ற போது அங்குள்ள பள்ளியில் ஒரு ஆசிரியர் " நீங்கள் அரசாங்கத்திடம் பேசி திங்கள் கிழமை மட்டும் மதிய உணவை இரட்டிப்பாக்க முடியுமா? வெள்ளிக் கிழமை மதியத்திற்கு பிறகு சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் குழந்தைகள் பட்டினி கிடக்கின்றன. திங்கள் கிழமை எரிகிற வயிற்றோடு பள்ளிக்கு வருகிற குழந்தைகளுக்கு வகுப்பு எடுக்க எப்படி ஆசிரியர்களுக்கு மனசு வரும்?" என்று கேட்டார்.

*  சென்னையில் ஒருமுறை பேசியபோது சனி, ஞாயிறும் பள்ளிக் கூடத்தை நடத்தச் சொல்லுங்கள்! எங்கள் குழந்தைகள் வாரம் இரண்டு நாள் பட்டினியாய்  இருப்பதை சகிக்க முடியவில்லை என்று தாய்மார்கள் கூறியதை சாய்நாத் பகிர்ந்துகொண்டார். இந்த செய்தியிலும் தெலுங்கானாவில் உள்ள மகபூப் நகர் தாய்மார்கள் 

"வெப்ப புயல் அடிக்கிற மே மாதத்திலும் பள்ளிக் கூடங்களைத் திறக்க வேண்டும். வருடாந்திர விடுமுறை வேண்டாம். எங்கள் குழந்தைகள் வெப்பப் புயலில் சுருண்டு இறந்தாலும் பரவாயில்லை;எங்கள் கண்கள் முன்னால் பட்டினியால் சாகவேண்டாம்"  

என்று  கேட்டது பதிவாகியுள்ளது.
  
வறுமை குறைந்துவிட்டதாக டெல்லி யோஜனா பவனில் உட்கார்ந்து புள்ளிவிவரங்களை அள்ளி விடுகிற "பெரிய பெரிய மூளைகளை" வைத்திருப்பவர்களுக்கு கொஞ்சமாவது இதயம் வேண்டாமா! என்ற கேள்வி இச் செய்தியை படிப்பவர்களுக்கு நிச்சயமாய் எழும். 

குறைந்தபட்சக் கூலி என்ன ?

தீக்கதிர் ஆகஸ்ட் 18-2013 இதழில் கே.ஆர். கணேசன் உள்ளாட்சி ஊழியர் கோரிக்கைகளை பற்றி எழுதியுள்ள கட்டுரை. தொழிலாளரின் பொருளாதாரக் கொள்கைகளை விரிந்த பார்வையோடு எப்படி விவரிக்க வேண்டுமென்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது. சில பொதுவான தகவல்களும் கிடைக்கின்றன.

* துப்புரவு பணியிலும், குடிநீர் வழங்கலிலும் 1 லட்சம் பேர் பகுதிநேர ஊழியர்களாக தமிழக உள்ளாட்சிகளில் பணி  புரிகிறார்கள். ரூ 700 முதல் ரூ 1400 வரை சம்பளம் பெறுவதே பல ஊராட்சிகளில் நிலை. நிர்ணயிக்கப்பட்ட தொகுப்பூதியம் வழங்குகிற உள்ளாட்சிகளில் குடிநீர் பணிகளுக்கு ரூ 2400, துப்புரவு பணிகளுக்கு ரூ 3600 தரப்படுகிறது.

1948 ல்  குறைந்தபட்ச கூலி சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1957 ல் 15வது முத்தரப்பு மாநாடு 2700 கலோரி என்கிற டாக்டர் அக்ராய்டு பார்முலாவை ஏற்றுக்கொண்டு கணவர், துணைவியார், 2 குழந்தைகள் ஆகியோர் கொண்ட குடும்பத்தை 3 யூனிட்டுகள் என வரையறுத்தது. 5 பேர் கொண்ட குடும்பத்திற்கு
அரிசி-14 அவுன்ஸ், பால்,பால் பொருட்கள் - 10 அவுன்ஸ், கீரை கிழங்குகள்  - 7 அவுன்ஸ்,துவரம்பருப்பு ,உருளைக் கிழங்கு, பழம் - தலா 3 அவுன்ஸ்,இறைச்சி- 2அவுன்ஸ், மீன்,முட்டை, சர்க்கரை, நல்லெண்ணெய் - தலா 1 அவுன்ஸ், ஒரு நபருக்கு ஆண்டுக்கு 18 கெஜம் துணி வீதம் 4 பேருக்கு 72 கெஜம், எரிபொருள், மின்சாரம், வீடு வாடகை 20 சதவீதம் என்கிற கணக்கில் நாள் ஒன்றுக்கு ரூ 57 -மாதம் ரூ 1650 என தீர்மானிக்கப்பட்டது. 2003 ல் இது நாள் ஒன்றுக்கு ரூ 182.30 மாதத்திற்கு ரூ 5649 என உயர்த்தப்பட்டது. இன்றைய விலைவாசியில் நாள் ஒன்றுக்கு ரூ 400 வீதம் மாதம் ரூ 12000 வழங்கப்பட வேண்டும் என்பதே கணக்கு. ஆனால் தமிழக சட்டமன்றத்தில் ரூ 2000 சம்பளத்தில் சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதற்கு என்ன அடிப்படை ? என்ன நியாயம் ? 
கட்டுரையாளர் கே.ஆர்.கணேசன் கேள்வி நியாயத்தை கூர்மையாக முன்வைக்கிறது.

* தமிழகத்தில் 12524 ஊராட்சிகளில் 79,394 குக்கிராமங்கள் உள்ளன. 23 சதவீத  ஊராட்சிகளில் மட்டுமே சொந்த நிதி ஆதார வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தில் 10 சதவீத நிதியே மாநில அரசால் உள்ளாட்சிகளுக்கு தரப்படுகிறது. இது கேரளாவில் இது 40 சதவீதம். மேற்கு வங்காளத்தில் 35 சதவீதம். கர்நாடகாவில் 30 சதவீதம். ஊராட்சிகள் எங்கே போகும்? குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு, சாலை, வரி வசூல் செய்கிற ஊழியர்களுக்கு சம்பளம்.. இதெற்கெல்லாம் என்ன செய்வது ? 

இப்படி அதிகாரப்பரவல், கிராம வளர்ச்சியோடு உள்ளாட்சி ஊழியர்களின் கோரிக்கைகளை கட்டுரையாளர் இணைக்கிறார். 

ரூ 10000 என்ற அளவிலாது குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கவேண்டும் என்று முடிகிற அவர் கட்டுரை தாராளமயம்- "வளர்ச்சி"- ருபாய் மதிப்பு வீழ்ச்சி- அந்நிய முதலீடு ஊக்குவிப்பு  ஆகியன பற்றிய விமர்சனங்களையும்  தொட்டுள்ளது .

திரிணாமுல்லின் "அமோக வெற்றி" எப்படி?

பீப்பில்ஸ் டெமாக்ரசி (ஆகஸ்ட் 5 - 11,2013) இதழில் கொல்கத்தாவிலிருந்து தேபாசிஸ் சக்கரவர்த்தி எழுதியுள்ள  HOW TRINAMOOL ACHIEVED A ' LANDSLIDE' WIN என்ற கட்டுரையில் கிடைக்கிற தகவல்கள்-

* ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள புர்சுரா- பூத் 80, ஜில்லா பரிசத் சீட் எண் 36- மார்க்சிஸ்ட் கட்சி ஜீரோ வாக்குகளையே பெற்றுள்ளது. திரிணாமுல் வேட்பாளர் 604 வாக்குகளை வாங்கியுள்ளார். அதே ஜில்லா பரிசத்தின் வேறு நான்கு பூத்துகளில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் 1,4,6,8 வாக்குகளையே பெற்றுள்ளபோது திரிணாமுல் வேட்பாளர் 498,555,369,577 வாக்குகளை பெற்றுள்ளார். இந்த வித்தியாசம் தேர்தல் நேர்மையாக நடந்தேறவில்லை என்பதை நிரூபிப்பதாக உள்ளது என்ற கட்டுரை வாதம் வலுவாக உள்ளது.

* ஜில்லா பரிசத் சீட் எண்கள் 35,36,38,39,40 லிலும் இடது முன்னணி வேட்பாளர்கள் 40 பூத்துகளில் ஒற்றை இலக்க வாக்குகளையும், 60 பூத்துகளில் 30 க்கும் குறைவான வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

* பர்த்வான் - கெட்டுராம் ஜில்லா பரிசத் சீட்டில் முராகராமில் உள்ள மூன்று பூத்துகளில் மார்க்சிஸ்ட் கட்சி 1,2,3 என வாக்குகளை பெற்றுள்ள போது திரிணாமுல் 554,707,356 வாக்குகளை பெற்றுள்ளது. இன்னும் மூன்று பூத்துகளில் 7,8,9 வாக்குகளையும் திரிணாமுல் 350 முதல் 650 வாக்குகள் வரை பெற்றுள்ளது. இந்த பூத்துகள் அனைத்திலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியே அதிக வாக்குகளை பெற்றிருந்தது.

* வடக்கு 24 பர்கானா மாவட்ட மினாகா - துதுர்டகா ஒன்றியத்தில் மொத்தமுள்ள 13 சீட்டுகளில் 6 ல் திரிணாமுல் போட்டியின்றி வெற்றி பெற்றது. ஆனால் போட்டி நடைபெற்ற 7 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கட்சி வென்றுள்ளது. உருட்டல் மிரட்டல் மூலம் வேட்புமனு தாக்கல் செய்வது தடுக்கப்படாமல் இருந்தால் அந்த 6 லிலும் இடது முன்னணி வெற்றி பெற்றிருக்கும் என்ற கட்டுரையாளர் கருத்து  நியாயமாகவே இருக்கிறது.  

வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்காமை, பூத்துகளை கைப்பற்றியது, வாகு எண்ணிக்கையில் மோசடி, முகவர்களை விரட்டியடித்தது, வெற்றி பெற்ற இடங்களில் கூட ஆவணங்களை கிழித்து எறிந்து முடிவை மாற்றி அறிவித்தது என  தில்லுமுல்லுகளை விவரிக்கிற கட்டுரை இது.

ஆனால் நேர்மையான மதிப்பீடு ஒன்றையும் பதிவு செய்து அக்கட்டுரை முடிகிறது. திரிணாமுல் வெற்றி என்பதே இந்த முறைகேடுகளால்தான் என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த தில்லுமுல்லுகள் இல்லாவிட்டால் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்க முடியாது என்பதே அது. 

வலுவான ஆதாரங்களோடு, உண்மை வழுவாமல் எழுதப்பட்ட கட்டுரை.  

டாலர் பாம்பும்- ருபாய் வீழ்ச்சியும்

பரமபத விளையாட்டை உதாரணமாகக் கொண்டு  இத்தலைப்பை ருபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றிய தனது "காப்பீட்டு ஊழியர் "-ஆகஸ்ட் 2013 இதழ் கட்டுரைக்கு வெ.ரமேஷ் தந்துள்ளார்.

அதில் சுவாரஸ்யமான விவரங்கள் தரப்பட்டுள்ளன. இன்று ஒரு டாலருக்கு ரூ 61.65  ஆக உள்ள ருபாய் இன்னும் சரியுமோ என்ற அச்சத்தை தந்து கொண்டிருக்கிறது. 1990 ல் கூட ரூ 17 ஆக இருந்துள்ளது. யோசித்து பாருங்கள். 1 டாலருக்கு 1 ருபாய் என்று இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். 1947 ல் இப்படித்தான் இருந்திருக்கிறது என்று அக்கட்டுரை கூறுகிறது. இன்னும் பின்னால் போனால் ஒரு டாலருக்கு 10 பைசா ( 1925 ல்) 8 பைசா (1913) என்று கூட இருந்திருக்கிறது.  

காச நோய்... கவலைப்படுகிறதா அரசு ?



இந்து  16.8.2013 நாளிதழின் நடுப்பக்க கட்டுரை - அரசு காச நோய் கட்டுப்பாடு திட்டம் பற்றியது- டி. ஜேக்கப் ஜான் , முன்னாள் அகில இந்தியத் தலைவர், இந்திய குழந்தை மருத்துவர் கழகம்- அதில் உள்ள இரண்டு  தகவல்கள்:

1 ) உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் உள்ள இந்தியாவில் உலகக் காச நோயாளிகளில் 26 பேர் உள்ளனர்.

2) இந்திய பொருளாதாரத்திற்கு காச நோய் காரணமாக ஏற்படும் இழப்பு 23.7 பில்லியன் டாலர்கள். (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ 142200 கோடிகள்). ஆனால் அரசின் புதிய தேசிய காச நோய் கட்டுப்பாடு திட்டத்திற்கான  ( REVISED NATIONAL TB CONTROL PROGRAMME- RNTCP) செலவினம் 200 மில்லியன் டாலர் மட்டுமே. அதாவது இந்திய ருபாய் மதிப்பில் ரூ 1200 கோடிதான்.

வங்கிகளின் எதிர்காலத்தை 30 பேர் சீரழிப்பதா?

இந்து 16.8.2013 இதழின் முதல் பக்க செய்தியொன்றில்  வாராக்கடன்கள் காரணமாக பொதுத்துறை வங்கிகள் சந்தித்துள்ள இழப்புகள் குறித்து சி.பி.ஐ விசாரணை துவங்கியிருப்பதை செய்தியாளர் தேவேஷ் கே. பாண்டே தெரிவித்துள்ளார்.

அதில் மறுசீரமைக்கப்பட்ட கடன்களின் மதிப்பு ஐந்து லட்சம் கோடியை தொட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இத்தொகை 2 லட்சம் கோடிகளாக இருந்தது. மொத்த கடன்களில் 31.3.2009 ல் 4.87 சதவீதமாக இருந்த மறுசீரமைக்கப்பட்ட கடன்கள் 31.3.2012 ல் 8.24 சதவீதமாக உயர்ந்துள்ளது. இத்தகைய கடன்களில்தான் மிகப்பெரும் தொழிலதிபர்கள் புகுந்து விளையாடியிருப்பதாக புகார். 

அண்மையில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வாராக்கடன் வைத்துள்ள முதல் பெரிய 30 கணக்குகளை நெருக்கி வசூலித்தாலே அவ்வங்கிகளின் பாலன்ஸ் ஷீட்டுகளை தேற்றிவிடலாம் என்றார்.  30 பேர் வங்கிகளின் எதிர்காலத்தையே சீரழிக்க முடியுமென்றால் இவ்வளவு நாள் வேடிக்கை பார்த்தவர்களை என்ன செய்வது !