Friday, 10 January 2014

14 வது நிதிக் குழு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அளித்த குறிப்பின் சுருக்கம்

1. இந்திய அரசியல் சாசனம் நிதிக் குழுவிற்கு  முக்கியப் பொறுப்பை அளித்துள்ளது. மாநில அரசுகள் வளர்ச்சிக்கான பெரும் செலவினத்தை செய்ய வேண்டியிருக்கையில் அதன் வருவாய் திரட்டுகிற திறன் மத்திய அரசுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருக்கிறது. நமது கூட்டாச்சி அமைப்பிலுள்ள இந்த முரண்பாட்டைக் கடப்பதற்கான வழிவகை செய்வதே நிதிக் குழுவின் கடமை ஆகும். வருவஈய் பகிர்வை நிபந்தனையின்றி நிதிக் குழு செய்யவேண்டும். ஏனெனில் வெவ்வேறு சமூகப் பார்வைகளை, அரசியல் சித்தாந்தங்களைப் பிரதிநிதித்துவம் செய்கிற  அரசியல் கட்சிகள் மாநில அரசுகளை நடத்துகையில் அவர்களின் கண்ணோட்டத்திற்கேற்ற பொருளியல் பாதைகளைக் கடைப்பிடிக்கிற வாய்ப்பை நிபந்தனையற்ற வருவாய் பகிர்வே அளிக்க முடியும். இது உறுதி செய்யப்படாவிடில் மக்களின் தேர்தல் தெரிவுகள் அர்த்தமில்லாமல் போய்விடும். இதை நிறைவேற்ற மத்திய,மாநில அரசுகளுக்கு மேலான சுயேட்சையான அரசியல் சாசன அமைப்பாக செயல்பட வேண்டும்.

2.மத்திய அரசு நிதிக் குழுவின் சுயேட்சையான செயல்பாட்டை அரிக்கச் செய்கிற, மாநில அரசுகளின் தன்னாட்சி உரிமைகளைப் பாதிக்கிற, தான் அமலாக்க விரும்புகிற நவீன-தாராளமயப் பாதையை திணிக்கிற முயற்சிகளில் திட்டமிட்டு ஈடுபட்டு வருகிறது. அதை 14 வது நிதிக் குழு மறுதலித்து தனது கடமையைச் செய்ய வேண்டும்.

3 மத்திய அரசு தன்னிச்சையாய் நிதிக் குழுவை நியமித்தல், அதன் ஆய்வு வரம்புகளை தீர்மானித்தல், நிதிக் குழுவின் வழிக்கு அப்பாற்பட்டு பெரும்பகுதி வருவாய் பகிர்வுகளைச் செய்தல் மாநிலங்கள் மீது நிபந்தனைகளை விதித்தல் ஆகிய வகைகளில் நிதிக்குழுவின் நோக்கங்களை நீர்க்கச் செய்கின்றன. 13 வது நிதிக் குழுவிற்கு அளித்த குறிப்பிலேயே மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான அம்சங்களை தீர்மானிக்கிற நிதிக் குழு போன்ற அரசியல் சாசன அமைப்புகளின்  நியமனங்கள் மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து செய்யப்பட்டு பின்னர் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலின் பின்னேற்பையும் பெறவேண்டும். மத்திய அரசோ தேசிய வளர்ச்சி கவுன்சில், மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் ஆகிய அமைப்புகளை ரப்பர்  ஸ்டாம்ப் அமைப்புகளாக மாற்றியுள்ளது.

ஆய்வு வரம்புகள் 
 
4. 14 வது நிதி குழுவின் ஆய்வு வரம்புகள் ஆட்சேபத்திற்கு உரியவையாக உள்ளன. அரசியல் சாசனம் அத்தியாயம் 1 பகுதி 12 ன் அடிப்படையில் வரி- கொடை பகிர்வில் மாநிலங்களுக்கு நிபந்தனையற்ற உரிமை உண்டு. ஆனால் நிபந்தனை விதித்தல் என்பது 11 வது நிதிக்குழுவிலிருந்தே துவங்கி விட்டது. 14 வது நிதிக் குழுவும் மாநில அரசின் நிதி நிலை, பற்றாக்குறை, மத்திய மாநில அரசுகளின் கடன் அளவுகள், 13 வது நிதிக்குழு பரிந்துரைத்த நிதி ஒழுங்கிற்கான சாலை வரைபடம், ஆகியவற்றை ஆய்வு செய்து நிலைத்த, நீடித்த நிதிச் சூழலுக்கு வழிவகுக்கிற பரிந்துரைகளை- சமச் சீரான வளர்ச்சிக்கு ஏற்பவும், நிதிப் பொறுப்பு பட்ஜெட் மேலாண்மைச் சட்டத்தை திருத்துவது உள்லிட்டதுமான - செய்யுமெனவும் தனது ஆய்வு வரம்புகளை அறிவித்துள்ளது. நிதிப் பொறுப்பு பட்ஜெட் மேலாண்மைச் சட்டத்திற்கேற்ப செயல்படுவதை கண்காணித்து ஊக்கத் தொகையும்  அல்லது ஊக்க மறுப்பும் உண்டு என்றும் கூறியுள்ளது.இதுவெல்லாம் நவீன- தாராளமாய பாதையை மாநில அரசுகளை வலிய பின்பற்றச் செய்வதற்கு வருவாய் பகிர்வை ஆயுதமாக பயன்படுத்துகிற மத்திய அரசின் தொடர் முயற்சிகளின் பகுதியேயாகும்.

5. நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டம் விதித்துள்ள வருவாய் பற்றாக்குறை வரம்புகளும், நிதி பற்றாக்குறை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டுமென்கிற நிபந்தனையும் "வருவாய் செலவினம்" என்கிற பதத்தைப் பற்றிய போதிய புரிதல் இல்லாமல் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளுக்கான கொடைகள், "உதவி" பெறும் பள்ளி-கல்லூரிகள், அரசு மருத்துவர்களின் சம்பளம், மருந்துகள் ஆகியனவற்றை வருவாய் செலவினமாக கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் வரையறுத்துள்ளதால் மேற்கூறிய சட்டத்தை அமலாக்கினால் மக்கள் நலனுக்கான இச் செலவினங்கள் எல்லாம் வெட்டுக்கு ஆளாகும். நலன் மற்றும் வளர்ச்சிக்கான பொறுப்பில் இருந்து அரசு விலகுவது என்பதே இதன் உள்ளடக்கம்.

6. ஆய்வு வரம்புகளின் மீதான பரிந்துரைகளைச் செய்வதற்கு 11 உட்பிரிவுகளை கணக்கிற் கொள்ளுமாறு நிதிக் குழு பணிக்கப்பட்டுள்ளது. அதுவெல்லாம் மாநில அரசின் வரம்புக்குட்பட்ட நிதி அம்சங்களில் தலையிடுகிற பிரிவுகளே ஆகும். ஆய்வு வரம்புகளில் பல அம்சங்கள் மத்திய அரசின் நவீன-தாராள மயப் பாதையை எதிரொலிப்பவையே ஆகும். இவை பிற அரசியல் கண்ணோட்டங்களைக் கொண்ட கட்சிகளின் மாநில அரசுகளின் அணுகுமுறையினின்று முரண்படக் கூடியவை ஆகும்.

7. ஆய்வு வரம்புகளின் பிரிவு 3 (ii)- மத்திய அரசின் சிவில் நிர்வாகம், பாதுகாப்பு, உள்நாட்டு-எல்லை பாதுகாப்பு, கடன் செலுத்துதல் உள்ளிட்ட உறுதியளிக்கப் பட்ட செலவினங்களுக்கு முன்னுரிமை தருகிறது. இது ஏற்க இயலாதது. மத்திய அரசின் " உறுதியளிக்கப்பட்ட செலவினத்திற்கு" (Committed Expenditure) முன்னுரிமை அளித்து மீதத்தை மாநிலங்களுக்கு பகிர்வது அரசியல் சாசனம் பிரிவு 280 ஐ மீறுவதாகும். இப்பிரிவு மொத்த நிதியாதாரங்களையும் "பிரிக்கத்தக்க வளம்" (Divisible Pool) என்றே வரையறுத்துள்ளது.
மத்திய அரசின் கொள்கைகளால் வட்டி, சம்பளங்கள் போன்றவற்றின் சுமை மாநிலங்களுக்கு கூடுவதால் நிதிப் பற்றாக்குறைக்கு விதிக்கப்படும் சட்ட வரம்புகள் அரசியல் சாசன மீறல்கள் மட்டுமல்ல நியாயத்திற்கும்  புறம்பானதாகும்.

8. மேற்கூறிய பிரிவு மத்திய அரசு முன்மொழிகிற திட்டங்களுக்கான செலவுகளையும் முன்னுரிமைக்குரிய " உறுதியளிக்கப்பட்ட செலவினமாகவே" கருதுகிறது. 1990 களில் இருந்து மாநில அரசுகள் இத்தகைய திட்டங்களை தங்கள் வசம் நிதியோடு ஒப்படைத்து விட வேண்டுமென்று கோரி வந்துள்ளன. மே 4, 1996 ல் பிரதமர் கூட்டிய மாநில முதல்வர்கள் கூட்டத்திலும் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் நவீன தாராளமய நிபந்தனைகளுடன் கூடிய மத்திய அரசின் திட்டங்கள் மேலும் மேலும் அறிவிக்கப்படுகின்றன.

9. பிரிவு 3 (vi) - எவ்வளவு மானியம் தேவை, மானியங்களை சமச்சீராக மத்திய-மாநில அரசுகள் பகிர்தல் ஆகியன பற்றி பேசுகிறது. மானிய அளவுகளை ஆய்வுக்குட்படுத்துவது
மாநில அரசுகளின் அரசியல் பார்வை, வாக்குறுதி ஆகியவற்றை கேள்விக்கு ஆளாக்குவது ஆகும். சமச்சீரான பகிர்வு என்பது மானியச் சுமையை மாநிலங்கள் மீது சுமத்துகிற
ஏற்பாடு என அச்சம் எழுகிறது. தேசிய வளர்ச்சி கவுன்சிலில் மாநில முதல்வர்கள் விடுத்த ஒருமித்த வேண்டுகோளையும் மீறி சர்வ சிக்ஸ அபியான் திட்டத்திற்கான தனது பங்களிப்பை மத்திய அரசு குறைத்துக் கொண்டது ஓர் உதாரணம்.

10. பிரிவு 3 (viii) - அரசின் கொள்கை மாற்றங்களில் இருந்து பொதுப் பயன்பாட்டு சேவைகளுக்கான- குடிநீர், நீர்ப்பாசனம், மின்சாரம், பொதுப் போக்குவரத்து- கட்டணங்களுக்கு சட்ட பூர்வ விலக்கு அளிப்பதைப் பற்றி பேசுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வரும் மாநில அரசுகள் பொதுச் சேவைக் கட்டணங்கள் பற்றிய சுயேட்சையான பார்வை கொண்டிருக்கக் கூடாது என்பதே இதன் நோக்கம். 13 வது நிதிக் குழு கூட பொதுச் சேவைகளின் இருப்பு வணிகரீதியாகவும் அமைவது பற்றியே பேசியது. ஆனால் 14 வது நிதிக் குழுவோ மாநில அரசின் தலையீடையே கேள்வியாக்குகிறது. அத்தியாவசிய சேவைகளின் கட்டண உயர்வு, தனியார்மயம் என்கிற மத்திய அரசின் நிகழ்ச்சிநிரலோடு இணைந்தது.

11. பிரிவு 3 (ix)- பொதுத்துறை நிறுவனங்களை போட்டிக்கு ஏற்பவும், சந்தைக்கு உட்பட்டதாகவும், விற்பனைக்கு பட்டியலிடப்பட்டதாகவும் மாற்றுவது பற்றி பேசுகிறது. இது பொதுத்துறை நிறுவனங்களை சீரமைத்தும், மீட்சி பெறச் செய்தும் தனியார் மயமாகாமல் பாதுகாக்க முனைகிற மாநில அரசாங்கங்களுக்கு எதிரானது ஆகும்.

12. பிரிவு 3 (xi)- உத்தேசிக்கப் பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி முறைமையின் தாக்கம் மத்திய மாநில அரசுகளின் நிதியாதரங்கள் மீது எவ்வாறு உள்ளது, வருவாய் இழப்பிற்கான ஈடு ஆகியன பற்றி பேசுகிறது. தாக்கம் பற்றிய ஆய்வு தவறு இல்லை. ஆனால் வரி விகிதம் பற்றிய வரம்புகளை தீர்மானிப்பது என்பது மாநில உரிமைகளில் தலையிடுவது ஆகும். 13 வது நிதிக் குழுவே இப்படி ஒரு முயற்சியைச் செய்தது. ஆனால் 'அதிகாரம் அளிக்கப்பட்ட மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய நிதியமைச்சர் உள்ளடக்கிய குழு' தீர்மானித்த அளவைக் காட்டிலும் 13 வது நிதிக் குழு குறைவான விகிதத்தை அறிவித்ததும், மாநில அரசுகளின் எதிர்ப்பை மீறி பெட்ரோலியம் , மதுபானம் ஆகியவற்றை இவ்வரி முறைமையின் வரம்புக்குள் கொண்டு வர முயற்சித்ததும் நடந்தேறியது. ஆனால் சரக்கு மற்றும் சேவை கட்டண அமலாக்கம் தடைபட்டது.

13. 14 வது நிதிக் குழு நிபந்தனை அடிப்படையில் வருவாய்-கொடை பகிர்வு, தன்னிச்சையாக ஆய்வு வரம்புகள் தீர்மானிக்கப்படல், அரசியல் சாசன நடுவு நிலைக்கு எதிரான நடைமுறைகள் ஆகியவற்றை நிராகரிக்க வேண்டும். ஆய்வு வரம்பு பிரிவு 3 (ii ) ஐ நிராகரிக்க வேண்டும். அதை ஏற்றுக் கொண்டால் மாநில அரசின் சிவில் நிர்வாகம், கடன் செலுத்துதல், சம்பளம், பென்சன் செலவினங்கள் ஆகியவற்றையும் "உறுதியளிக்கப்பட்ட செலவினங்களாக" கருதி பகிர்வில் முன்னுரிமை தர வேண்டும்.

மாநிலங்களின் நிதி தன்னாட்சி நீர்த்துப் போதல் 

14.  நிதிக் குழுவை ஓர் தன்னாட்சி அமைப்பாக, நீதித்துறை நிகர் அமைப்பாக இயங்கச் செய்வதன் மூலம் கூட்டாட்சி நிதி அமைப்பின் தூணாக விளங்கச் செய்வதே அரசியல் சாசனத்தின் நோக்கமாகும். ஆனால் நிதிக்குழுவின் சட்ட பூர்வமான நிதிப் பகிர்விலிருந்து விலகி நிதிப் பகிர்வைச் செய்ய முனைவதன் மூலம் இந்த அமைப்பின் இருப்பை திட்டமிட்டு சீர்குலைக்க எண்ணுகிறது. 2012-13 ல் 6.5 லட்சம் கோடிகள் மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்ததில் 55 சதவீதம் மட்டுமே நிதி குழு வாயிலாகச் செய்யப்பட்டுள்ளது.15. முதல் விலகல் எதுவெனில், திட்டக் குழு மூலம் திட்ட உதவிக்கான  நிதியை  மாநிலங்களுக்கு அளிக்கத் துவங்கியதுதான். மத்திய அரசு திட்டங்கள் வாயிலான நிதியாதாரங்களின் மடை மாற்றம் மாநில அரசுகளுக்கான நிதி அளிப்பு மொத்த மத்திய திட்ட நிதியில் 2006-07 ல் 28 சதவீதம் ஆக இருந்த நிலையிலிருந்து 2012-13 ல் 17 சதவீதமாகக் குறைந்துள்ளது. மத்திய அரசுத் திட்டங்களுக்கான மாநில அரசின் பங்களிப்பும் அதிகரித்துள்ளது. சர்வ சிக்ச அபியான் திட்டத்திற்கு மாநில அரசின் பங்களிப்பு துவக்கத்தில் 25 சதவீதமாக இருந்தது. தற்போது 50 சதவீதமாகக் கூடியுள்ளது.16. இன்னொரு விலகல் என்னவெனில், மத்திய அரசு திட்டங்களுக்கான நிதி அளிப்பு மாநில அரசின் பட்ஜெட் மூலம் செல்லாமல் நேரடியாக மாவட்ட நிர்வாகத்தின் மூலமாகவும், சுயேட்சையான அமைப்புகள் வாயிலாகவும் அனுப்பபடுவதாகும். மாநில அரசுகளும் கூட தங்களின் இணைப் பங்களிப்புகளை இத்தகைய சுயேட்சையான அமைப்புகளுக்கு நேரடியாக முன்கூட்டியே அளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாயின. சர்வசிக்ச அபியான், தேசிய கிராம சுகாதார முகமை (NHRM) ஆகியன உதாரணங்கள். 2012-13 ல் 1.3 லட்சம் கொடிகள் அதாவது 20 சதவீத மொத்த நிதி மாற்றங்கள் இப்படி நேரடியாகச் செய்யப்பட்டுள்ளன. 17. மேலும், மத்திய அரசு முன்மொழிந்த திட்டங்களின் நிபந்தனைகள் மாநில அரசின் அதிகார இறையாண்மை மீது தாக்குதல்களை தொடுக்கின்றன.உதாரணமாக ஜவஹர்லால் நேரு நகர் புனரமைப்புத் திட்டத்தின் (JNNURM )ஒரு நிபந்தனையாக முத்திரை வரியை ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக 5 சதவீதத்திற்கு கீழ் கொண்டு வரவேண்டும் என்பதாகும்.   18. பன்னாட்டு நிதி நிறுவனங்கள் தங்களின் துறை வாரி- கட்டமைப்பு சீர்திருத்த கடன்களை, மாநில அரசுகளின் நிதிக் கொள்கைகள் மீது நிர்பந்தம் ஏற்படுத்தி நவீன தாராள மயக் கட்டுக்குள் கொண்டு வரப் பயன்படுத்துகின்றன. 


19. மத்திய அரசின் கொள்கைகள் மாநில அரசின் செலவினங்களை உயர்த்தி விடுகின்றன. பணவீக்கத்தை உருவாக்கும் கொள்கைகள் ( வறுமைக் கோட்டிற்கு மேல்-கீழ் வரையறைகளை உணவு விநியோகத்தின் மீது திணிப்பது உள்ளிட்டு),,  6வது ஊதியக் குழு பரிந்துரைகளை மத்திய அரசு அமலாக்கியதால் ஏற்பட்ட கூடுதல் சுமை ஆகியன நிதி நெருக்கடிக்கு இட்டுச் சென்றுள்ளன. ஊதிய உயர்வு செலவினங்களின் ஒரு பகுதியை மத்திய அரசு ஏற்கவேண்டும் என்கிற மாநிலங்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.


20. 13 வது நிதிக் குழு திரிபுரா போன்ற சிறிய மாநிலங்களின் சிரமங்கள் பற்றி அக்கறை காண்பிக்கவே இல்லை. நிர்வாகச் செலவினங்களின் விகிதங்கள்  சிறிய மாநிலங்களுக்கு மொத்த மாநில உற்பத்தியில் அதிகமாகவே இருக்கும். மேலும் திரிபுராவில் தீவீரவாதப் பிரச்சினையின் காரணமாக செலவினங்கள் கூடுவதும் கணக்கிற் கொள்ளப்படவில்லை.14 வது நிதிக் குழு நிதி ஒழுங்கிற்கான வரம்புகளை தீர்மானிக்கும் போது இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.


21. மத்திய அரசு உட்டோ (WTO) இந்தோ-ஆசியான் சுதந்திர வர்த்தக உடன்பாடு ஆகியவற்றை செய்யும்போது விவசாயம் போன்ற மாநில அதிகாரத்திற்குட்பட்ட அம்சங்களில் கூட கலந்தலோசிப்பதில்லை. இது விவசாயிகளின் துயரத்திற்கும்,சில மாநிலங்களில்  தற்கொலைகளுக்கும் கூட  வழி வகுத்துள்ளது. 


22. ஒரு அரிச்சுவடி பொருளாதார அணுகுமுறை எதுவெனில், ஒரு கொள்கை வசதியானவர்களுக்கு லாபங்களை தருமேயானால் பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீடு உறுதி செய்யப்படவேண்டும். மத்திய அரசு சுதந்திர வர்த்தக உடன்பாடுகள் மூலம் தொழிலதிபர்களுக்கு லாபங்களை தரும்போது , அதனால் பாதிப்பு அடைபவர்களுக்கு மாநில அரசுகள் மூலம் நிதி மடை மாற்றத்தை லாபம் அடைபவர்களிடம் இருந்து உறுதி செய்ய வேண்டும்.ஆனால் இது நடைபெறவில்லை.நிவாரணங்கள் அறிவிக்கப்படுவது இழப்பீடுகளுக்கு சமமாகாது. 14 வது நிதிக் குழு இதில் கவனம் செலுத்த வேண்டும்.


23. மாநில அரசுகள் போட்டி போட்டு தொழிலகங்களுக்கு வரிச் சலுகைகளை தந்து முதலீடுகளை வரவேற்க வேண்டியுள்ளது.இது அவர்களின் வருவாயையும் பாதிக்கிறது. மத்திய அரசும் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்காமல் நேரடி வரிச் சலுகைகளை வழங்குவதன் மூலம் அத்தகைய சலுகைகளை மாநில அரசுகளிடமும் எதிர்பார்க்கிற நிர்பந்தத்தை உருவாக்குகிறது.


 செங்குத்தான ஏற்றத் தாழ்வும், நிதிப்பகிர்வும்

24. மத்திக்கும், மாநிலங்களுக்கும் இடையிலான செங்குத்தான நிதி ஏற்றத் தாழ்வை சரி செய்கிற அரசியல் சாசனக் கடமையை நிறைவேற்றுகிற அளவில் வளங்கள் பகிரப்படவில்லை. உதார்ணமாக மாநில அரசுகளின் மொத்த செலவினங்கள் ரூ 13.06 லட்சம் கோடிகள் என்பது 2011-12 பட்ஜெட் தரும் மதிப்பீடு.இது மொத்த மாநில உற்பத்தி மதிப்பில் 14.54 சதவீதம். ஆனால் மாநிலங்களின் சொந்த வருவாய் 6.42 லட்சம் கோடிகளே. இடைவெளி 6.63 லட்சம் கோடி. மத்திய அரசிடம் இருந்து கிடைப்பது 4.80 லட்சம் கோடிகள் (அதாவது மாநில உற்பத்தி மதிப்பில் 5.34 சதவீதம்).மொத்த இடைவெளியான 7.39 சதவீதத்தை இது நிரப்பவில்லை. இதனால் தான் மாநில அரசுகள் கடனுக்குள் வீழ்கின்றன.           25. மத்திய அரசின் வருவாய் வரவுகளுக்கும் மாநிலங்களுக்கான நிகர வரி மற்றும் கொடை அளிப்புகள் ( மத்தியக் கடன்கள் மீதான வட்டி கழித்து) 1990-91 க்கும் 2004-05 க்கும் இடைப்பட்ட காலங்களில் வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் மத்திய அரசு நேரடி வரிகள், எக்ஸ்சைஸ் வரிகளில் தருகிற சலுகைகளும் மாநிலங்களுக்கான பங்கைக் குறைத்துள்ளன. கறுப்புப் பணம் மீது நடவடிக்கை இல்லை. 12 வது நிதிக் குழு பரிந்துரைத்த அளவிற்கு வரி வருவாய் தொழில் மந்தத்தின் காரணமாக இல்லை.மாநில அரசுகளுக்கு வந்த தொகையும் பரிந்துரைக்கப் பட்ட அளவுகளை விட மிகக் குறைவு.

26. மாநில அரசுகளுக்கான நிதிப் பகிர்வு மத்திய வரி வருவாயில் 50 சதவீதம் இருக்க வேண்டுமென்பது மாநிலங்களின் நீண்ட காலக் கோரிக்கை. அரசியல் சாசனத்தின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப நிதிப் பகிர்வை நிதிக் குழு மூலம் செய்வதன் வாயிலாகவும், மத்திய அரசு முன்மொழிந்த திட்டங்களுக்கு வேறு வழிகளில் திருப்பி விடப்படுகிற முறைகளை கைவிடுவதன் மூலமும் 50 சதவீதம் என்கிற இலக்கை எட்ட முடியும்.


27. எமது பரிந்துரை என்னவெனில், 50 சதவீத நிதி பகிர்வு, மத்திய வரிகளில் இருந்து உத்தரவாதப் படுத்தப்பட்ட குறைந்த பட்ச நிதிப் பகிர்வு, கூடுதல் வருவாய் இருந்தால் அதே விகிதத்தில் பகிர்வு ஆகியன ஆகும்.

நிதிப் பகிர்வும்- கொடைகளும் 

28. கொடைகள் வழங்கப்படுவது, மாநிலங்களின் திட்டமில்லாத வருவாய் இனச் செலவினப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காகும். இதற்கான முறை மத்திய அரசுக்கு சாதகமாக உள்ளது. வரியல்லாத வருவாய் மதிப்பீடுகளுக்கான அளவுகள் யதார்த்தமாக இல்லை. பொதுத்துறை பங்குகள் மீது 5 சதவீத டிவிடென்ட் வருவாய், நீர்ப் பாசன செலவினங்களில் 90 சதவீதத்தை மீட்பது போன்ற வரையறைகள் எட்டப்பட்டதாகவும் கட்டப்பட்டுள்ளன. இவை விருப்பமாக இருக்கலாமே தவிர பொருளாதார யதார்த்தம் அல்ல. திட்டமில்லாத செலவினம் பற்றிய மதிப்பீடுகளும் மிகக் குறைவாகச் செய்யப்பட்டுள்ளன.


29. 14 வது நிதிக் குழு, மாநில அரசுகளின் செலவின மதிப்பீடுகளையும், எதிர்கால வருவாய் பற்றாக்குறைக்கான கணக்கீடுகளையும் அவர்களின் கணக்கீடு முறைமையை பரிசீலித்து ஏற்றுக் கொள்கிற முந்தைய நடைமுறைக்குத் திரும்ப வேண்டுமெனக் கோருகிறோம்.


30. 1950 களில் மொத்த அரசு சந்தைக் கடனில் மத்திய - மாநில அரசுகளின் பங்கு விகிதம்  50:50 ஆக இருந்தது. தற்போது அது 85:15 ஆக வீழ்ந்துவிட்டது. மத்திய அரசே சந்தைக் கடன் திரட்டலில் பெரும்பங்கை ஆக்ரமிக்கிறது.

மாநில அரசுகளின் அதிகரித்துள்ள தேவைகளைக் கணக்கிற் கொண்டு 15 சதவீதத்தை 33.33 சதவீதமாக உடனடியாகவும்,ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக 50 சதவீதமாகவும் உயர்த்த வேண்டும்.

31. மாநில அரசுகளும் எல்லாச் சேவைகளுக்கும் வரி போடுகிற அதிகாரம் தராப்டுகிற வகையில் அது பொதுப் பட்டியலுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.


மாநில அரசுகளின் கடன் சுமை 

32. எல்லா மாநில அரசுகளின் கடன்களும் 1991 க்கும் 2012 க்கும் இடையில் செங்குத்தாக உயர்ந்துள்ளது. வருவாய்க் கணக்கு பகிர்வுகள் 1991 ல் 5.35 சதவீதமாக இருந்து 1999-2000 ல் 4.05 சதவீதமாக குறைந்ததே கடன் சுமை அதிகரித்ததற்கு காரணம். இக்காலத்தில் மத்திய அரசு அதீத வட்டியை போட்டதும் நிதி  நிலையை சிக்கலாக்கியது.
மாநிலங்களில் சேகரிக்கப்படும் சிறு சேமிப்புத் தொகை மீதே 16 சதவீதம் வரை வட்டி போட்டு கடனாகக் கொடுத்தது. இப்போதும் கூட 2 சதவீத வட்டி இடைவெளி சேமிப்பு தாரர்களுக்கு தருகிற வட்டிக்கும் - கடன் வட்டிக்கும் இடையில் உள்ளது.


33. தற்போது வங்கி வட்டி விகிதங்கள் சிறுசேமிப்பு வட்டியை விட அதிகமாக உள்ளதால் சிறு சேமிப்புகள் பாதிப்படைந்து உள்ளன. எனவே சிறு சேமிப்பு வட்டிகள் முன்னர் போன்று ஈர்க்கத் தக்கதாக மாற்றப்பட வேண்டும்.


34. மத்திய அரசின் திட்டங்கள்- பெரிய நீர்ப் பாசனத் திட்டங்கள், ஆறுகளை பாதுகாத்தல், ரயில்வே, துறைமுகம், தேசிய நெடுஞ்சாலை, விமான நிலையங்கள்- உருவாக்கப்படும்போது மாநிலங்களுக்கு இடையே சமசீரான அணுகுமுறையை உறுதி செய்ய வேண்டும். தனியார் நிறுவனங்கள் போன்று மாநிலங்களிடையே உள்ள போட்டியை பயன்படுத்தி சலுகைகளை கோரக் கூடாது. ரயில்வே, விமானதள ஆணையம் போன்றவை இப்படிப்பட்ட அணுகுமுறையைக் கையாளுகின்றன. இது பொதுத்துறை உருவாக்கத்தின் இலட்சியங்களையே சிதைப்பதாகும்.


35. மாநில அரசுகளின் ஒருங்கிணைப்போடு பொது விநியோக முறையை பலப் படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருள் சட்டதி வலுப்படுத்தி கட்டுப்பாடுகளை உறுதி செய்ய வேண்டும். மதிப்பின் அடிப்படையில் நிலக்கரி மீதான ராயல்டியை முடிவு செய்து மாநிலங்கள் இடையே பாரபட்சங்கள் இல்லாமல் செலுத்த வேண்டும். தேசிய பேரிடர் நிவாரண நிதி ஏற்பாட்டில் உரிய மாறுதல்கள் செய்து மாநில அரசின் நிதித் தொகுப்பை வலுப்படுத்த வேண்டும்.


36. மாநில அரசுகளுக்கான நிதிப் பகிர்வில் கடன் சேர்மானம் இருக்கக் கூடாது. கடன் சேர்மானத்தை தொடர்ந்தால் தற்போதைய 30:70 என்கிற கொடை மற்றும் கடன் விகிதம் 50:50 சதவீதமாக மாற்ற வேண்டும்.
 மாநில அரசுகள் ஏற்கனவே செலுத்தியுள்ள கடன் மற்றும் வட்டித் தொகைகள் மூலக் கடன் தொகையை விட மிக அதிகம் என்பதால் எல்லா நிலுவை மத்திய அரசுக் கடன்களையும் வட்டிகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும். சிறுசேமிப்பு கடன்களை பொறுத்த வரையில் சேமிப்புதாரர்களுக்கான வட்டி உயர்த்தப்பட்டு சேமிப்புகளும் அதிகமானால் மத்திய அரசின் வட்டி சேமிப்புதரர்களுக்கான வட்டி மற்றும் சேகரிப்புகளுக்கான செலவினம் ஆகியவற்றை மட்டுமே கணக்கிற் கொண்டு அமைய வேண்டும்.


உள்ளாட்சி அமைப்புகளை பலப்படுத்தல்    

37. பிரிவு 1 (ii ) - மாநிலங்களின் ஒருங்கிணைக்கப் பட்ட நிதியை பலப்படுத்தி உள்ளாட்சி அமைப்புகளுக்கான வருவாய்க்கு துணை புரிய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. 10 வது நிதி குழு அளிப்பு -ரூ 5380 கோடி, 11 வது நிதிக் குழு அளிப்பு- ரூ 10000 கோடி, 12 வது நிதிக்குழு அளிப்பு -ரூ 25000 கோடி என உள்ளாட்சி அமைப்புகளுக்கான அளிப்பு அதிகரித்துள்ளது.  இது 2007-08 ல் மூன்று அடுக்கு அரசு செலவினத்தில் 7.15 சதவீதம் ஆகும். இதுவே OECD எனப்படும் வளர்ந்த நாடுகளில் 28 சதவீதமாக உள்ளது. 


13 வது நிதிக் குழு பிரிக்கத் தக்க தொகுப்பில் இருந்து 2.28 சதவீதத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளிப்பதாக ஒதுக்கீடு செய்தது.

38. உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு வரவேற்புக்கு உரியது. எனினும் மாநில அரசுகளின் தலைக்கு மேலே, அவற்றின் ஒருங்கிணைக்கப் பட்ட நிதிக்கு வெளியே தொகை வழங்கப்படுவது அரசியல் சாசனத்தின் நடைமுறையை கேள்விக்கு உள்ளாக்குவதாகும்.


39. உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி பகிர்வில் எமது முன்மொழிவுகள் எவையெனில்,
- 14 வது நிதிக் குழு தேசிய வருவாய் தொகுப்பில் இருந்து உள்ளாட்சிகளுக்கு தற்போது தருகிற 2.5 சதவீதத்தை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

- நிதிப் பரவல் மாநில அரசின் ஒருங்கிணைக்கப்பட்ட நிதி வாயிலாகவே செய்யப்பட வேண்டும்.
- உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி அளிப்பு மாநில அரசுகளுக்கான வரிப் பங்கின் பகுதியாகக் கருதப்படக் கூடாது.

தமிழில் - க.சுவாமிநாதன்

______________________________________________________________________________

1 comment:

 1. வணக்கம்

  இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
  http://blogintamil.blogspot.com/2014/05/blog-post_31.html?showComment=1401551769354#c3833389610182853084

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete